திங்கள், ஜனவரி 04, 2010



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

இந்திய உழவும் (RAW) உலக உளவும் (CIA)


உழவு என்ற சொல் மனிதனை நாகரிக வாழ்க்கைக்கு விரைவாக மாற்ற உதவியதாகவும், அதே சமயத்தில் அவனை வேகமாக முன்னேறவும் வைத்தது. ஆனால் உளவு என்ற சொல் மொத்த நாகரிகத்தையும், தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்ல மொத்த நாடுகளின் மறைமுக விரைவான வீழ்ச்சிக்கும் காரணமாக அன்றும் இன்றும் இருக்கிறது.

மன்னர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்த எந்த மனித கூட்டத்திற்கும் இந்த உளவு அவஸ்யமானதாய் இருக்கவில்லை. உழவு அதன் தொடர்ச்சியாக உழைப்பு. ஓய்வு அதன் பிறகு சிறப்பு என்று சிரித்து வாழ்ந்த கூட்டம். அவர்கள் வாழ்க்கையில் எந்த பொய்யும் இல்லை. அடுத்தவரை கண்டு கொள்ள வேண்டிய அவஸ்யமும் தோன்றவில்லை. வஞ்சகம் இல்லாமல் வாயாற உண்மையை மட்டும் சுவைத்து வாழ்ந்த கூட்டமது. ஆனால் ஆட்சி, அதிகாரம், அதிகார வர்க்க சார்பாளர்கள் என்று ஒவ்வொன்றாக நாகரிக வாழ்க்கையில் உருவாக, மாற்றம் பெற இந்த உளவு என்ற சொல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. காலப்போக்கில் ஒவ்வொரு நாடும் இந்த உளவுத்துறை மூலமாகவே வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெற ஆரம்பித்து விட்டது.

தன்னுடைய வளர்ச்சி முக்கியம். அதே சமயத்தில் சார்ந்தவர்களின் வளர்ச்சி முடக்கப்பட வேண்டுமென்பது அதைவிட முக்கியம்"

இன்று எல்லாவிதங்களிலும் மனித நாகரிகம் வளர்ந்து விட்டது என்று நமக்கு நாமே பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டுருக்கும் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு நாடும் ஏன் இராணுவத்திற்கு இத்தனை கோடிகளைக் கொண்டு போய் கொட்டுகிறது. ஏன் தினம் அச்சப்பட்டு அவஸ்த்தைப்பட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக சக்திகள் என்பவர்களை மீறியும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த கண்களுக்கு தெரியாத நபர்கள் ஏன் ஆட்சி செலுத்துகிறார்கள். இன்றைய பாகிஸ்தான் பரிதாப நாடாக மாற்றம் பெற முக்கிய காரணம் என்ன?

அமெரிக்கா என்பது வெளியே இருந்து பார்க்கும் போது முதலாளித்துவ ஜனநாயக நாடு. இந்தியா ஜனநாயக நாடு என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மேல் உடையும் உள்ளே உள்ள வெளியே தெரியாத ஆடையும் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

இலங்கையுடன் சம்மந்தப்பட்ட சில நாடுகளின் உளவுத்துறைகளையும், பிரிவுகளையும் வாசித்து பார்த்துவிடலாமே? காரணம் இனி வரும் மொத்த இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களும் இந்த உளவு திருவிளையாடலும், உள்ளே உள்ள தமிழர்களின் ஒற்றுமையின்மையும் என்று ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வாழ்ந்த கதையைத் தான் பார்க்க வேண்டும்?

இலங்கை
Civil
State Intelligence Service (SIS)
Military
Directorate of Military Intelligence

இந்தியா
National Investigation Agency (NIA) என்ஐஏ
Central Bureau of Investigation (CBI) சிபிஜ
Intelligence Bureau (IB) ஐபி
Research and Analysis Wing (RAW) ரா

இஸ்ரேல்
ha-Mossad le-Modiin u-le-Tafkidim Myukhadim (Mossad) மொஸார்ட்

பாகிஸ்தான்
Inter-Services Intelligence (ISI) ஐஎஸ்ஐ
Military Intelligence (MI)
Intelligence Bureau (IB)
Federal Investigation Agency (FIA)
CIA -POLICE(Special Branch) (CIA)

இங்கிலாந்து
Secret Intelligence Service (SIS or MI6)
Security Service (colloquially MI5)
Government Communications Headquarters (GCHQ)

அமெரிக்கா
Central Intelligence Agency (CIA) சிஜஏ
Defense Intelligence Agency (DIA)
National Security Agency (NSA)
Federal Bureau of Investigation (FBI)

சீனா
Ministry of State Security (MSS)

அரசியல், வணிகம் என்று தொடங்கி இன்று ஆன்மிகம் மற்றும் தனிமனிதன் வரைக்கும் அத்தனை இடங்களிலும் நீக்கமற வியாபித்துள்ளது. பில்கேட்ஸ் முதல் அம்பானி வரைக்கும், அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரைக்கும், இங்கிலாந்து முதல் இந்தியா வரைக்கும், அமேசான் பழங்குடி போராட்டங்கள் முதல் மாவோயிஸ்ட் வரைக்கும் என்று பல திசைகளிலும் நீங்கள் பட்டியில் இட்டுக்கொண்டே போகலாம்.

சமூகநீதி, சமஉரிமை, பாரபட்சமில்லாத பங்களிப்பு என்று இன்று அத்தனை வளர்ந்த நாடுகளும் வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளுக்கு போதனைகளை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அவர்களின் சுயபாதுகாப்பு என்பது அத்தனை பொக்கிஷமாய் போற்றி பாதுகாத்துக்கொண்டு பொய்மையாய் மாயக்கோட்டையாய் அத்தனை கெட்டியாக பாதுகாப்பது ஏன்?

இன்று உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் போய் நின்றாலும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான CIA என்ற வார்த்தை ஒன்று மந்திரம் போல் உசுப்பும். அல்லது விழியை மருளச் செய்யும். இரண்டே வழிமுறை. "அடிபணிந்து விடு. இல்லாவிட்டால் அழிந்து விடு". கவிழ்த்த ஆட்சிகள், அழித்த தலைவர்கள் என்று தொடங்கி கொசு நுழைய முடியாத இடத்தில் கூட உள்ளே நுழையும் வல்லமை பெற்றவர்கள். ஒரே காரணம் அவர்களின் திறமை குறைவு. ஆனால் விசுவாசமாய் மாற காத்துருப்பவர்கள் அதிகம்.

இஸ்ரேல் மொஸார்ட் முதல் இந்தியாவின் சிபிஜ,ஐ,பி,ரா என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு உளவு நிறுவனம். கண்காணிப்பது மட்டுமல்ல, முடிந்தால் கலவரத்தையும் உருவாக்கு. தொத்தல் நாடுகள் கூட விதிவிலக்கல்ல.

அமெரிக்கர்கள் என்றும் அமெரிக்கர்கள். ஆனால் பிற எந்த நாட்டினரும், எந்த நாட்டிற்குள் சென்றாலும் பிரிந்து நின்று தன்னை தனியாக காட்டிக்கொள்வதற்கு ஏராளமான காரணிகள் உண்டு. மதம்,இனம்,பணம்,ஜாதி,ஆசைகள், பலவீனம் என்று தொடர்ச்சியாக போய்க்கொண்டே இருக்கும்.

மொத்த அரேபிய தேசமும் ஒன்றாக இணைந்தால்? ஓரே நுழைவு வாயில் வழியாகத்தான் எண்ணெய் வர்த்தகத்தை அவர்களுக்கு இடையே உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு மூலம் கொண்டு வந்தால் என்ன நடக்கும்? ஓரு வருடத்திற்குள் எவர் வேண்டுமானாலும் அமெரிக்காவிற்கு விசா இல்லாமல் வரலாம் என்று கடையை விரித்து வைக்கலாம்.

ஒருவர் மற்றொருவருடன் சேராத வரைக்கும், சேர முடியாத காரணிகளை உருவாக்கி வைத்திருக்கும் வரைக்கும் அமெரிக்கா மட்டுமல்ல தற்போது பாவ்லா காட்டிக்கொண்டுருக்கும் எந்த நாடும் வல்லரசு தான். இன்றும் என்றும்? தான் வளர்வது எத்தனை முக்கியமோ அதைப்போல மற்றவர்களை வளர விடாமல் தடுத்து வைத்திருப்பதும், தனக்கு கீழே வைத்துருப்பதும் அத்தனை முக்கியம். அதனால் தான் ஒவ்வொரு நாடும் உளவு நிறுவனங்களையும், ஆள்காட்டிகளையும் உருவாக்கி மற்ற நாடுகளை முடிந்தவரைக்கும் உருக்குலைத்துக்கொண்டே இருக்கிறது.

வளர்ச்சி என்பது திறமை என்பதாக இருந்தால் ஏன் மற்ற நாடுகளின் மேல் இத்தனை அக்கறை? ஆட்சிக்கு வருபவர்கள் என்பவர்கள் அந்த ஐந்து வருடங்கள். ஆனால் ஆட்சியாளர்களையும், என்றும் ஆண்டு கொண்டுருக்கும் அதிகார வர்க்கத்தையும் என்றுமே தங்களுடைய பிடியில் வைத்திருக்கும் கார்ப்ரேட் கணவான்களின் ஆசை, விருப்பம்,நோக்கம் என்பதில் தொடங்குவது தான் பல நாடுகள் பாதாளத்தில் போய் விழுவதும், பல வாழ்வுரிமைப் போராட்டங்கள் பள்ளத்தில் தள்ளி மூடப்படுவதும் என்பதில் முடிந்து விடுகின்றது.

நீங்கள் பருகும் ஒரு பாட்டில் கோக், விரும்பி தேய்த்து குளிக்கும் சோப், விரும்பும் வாசனை திரவியங்கள் அத்தனை முகம் தெரியாத உலகத்தை தங்கள் கைபிடிக்குள் வைத்துருக்கும் முதல் நூறு பணக்காரர்களுக்கு உங்களை அறியாமலே அவர்களின் சொத்துக்களையும் ஆசைகளையும் அதிகப்படுத்திக்கொண்டுருக்கிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியுமா?

ஒரு கோக் நீங்கள் வாங்கும் போது இங்கே உள்ள காளிமார்க் பானத்தின் தொழிற்சாலையின் செங்கல் மெதுமெதுவாக உருவப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதுண்டா?. அந்நிய மூதலீடு இல்லாமல், வளர்ச்சி அடைந்த நாடுகளின் உதவி இல்லாமல், அவர்களின் விஞ்ஞான கருவிகள் இல்லாமல் நாம் வாழ முடியுமா? என்ற உங்களின் குதர்க்கத்தனமாக கேள்வியும் கேலியும் புரிந்தாலும் அந்த கார்ப்ரேட் கணவான்களின் ஆசைக்காக, தேர்ந்தேடுக்கப்படும் ஜனநாயகவாதிகள், அதிகாரவர்க்கங்கள், ஆள்காட்டிகள், கைகூலிகள், என்று தொடங்கி உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளையும் தங்கள் கண் அசைவில் அவர்கள் வைத்துருக்கும் வித்தையை உங்களால் உணர வாய்ப்பு உள்ளதா?

அரசாங்கத்தின் உளவு என்பது நாட்டின் வளர்ச்சியை விட மற்றவர்களின் வீழ்ச்சியை விரைவு படுத்துவது. தனி மனித கார்ப்ரேட் கண்வான்களின் அடியாள் பட்டாளங்கள் என்பது உலகமயமாக்கல் என்ற தத்துவத்தை பரப்பி தன் வலைக்குள் வீழ்ந்த நாடுகளை எழ முடியாமல் என்றும் வைத்துருப்பது. இந்த இரண்டு தண்டவாளத்தில் தான் உலக உருண்டையில் உள்ள 70 சதவிகித நாடுகள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

1948 முதல் கடந்த 60 ஆண்டுகளில், இலங்கையில் இன்றைய சீனா போல் வேறு எந்த வெளிநாடுகளும் இப்போது போல அப்பட்டமாக ஆளுமை செலுத்தவில்லை. மின்திட்டம், சாலைவசதி,இராணுவ உதவி என்று தொடங்கி காலவரையற்ற கடன் ஒப்பந்தங்கள் வரைக்கும் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காரணம் என்ன?

அதே போல் நேரு தொடங்கி இன்று மன்மோகன் சிங் வரைக்கும் இன்று போல் இலங்கைக்கு இத்தனை ஆதரவாக இருந்தது இல்லை?

தனிமனிதர்கள் சேர்ந்த கூட்டமென்பது நாடாக நீங்கள் நினைத்தால் அது தவறு. தகுதியானவர்களின் ஆசைப்படி ஆள நிணைப்பதன் தொடக்கம் தான் ஒரு நாட்டிற்கும் இன்னோரு நாட்டுக்கும் வெளியே தெரியாத, சொல்ல முடியாத, காட்டிக்கொள்ளாத புரிந்துணர்வு.

இத்தனை தமிழர்களை கொன்று குவித்தும் ராஜபக்ஷே மேல் ஏன் இன்று வரைக்கும் எந்த நாடும் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை. நீங்கள் மேலாதிக்க சக்தி என்றால், உங்கள் மூலம் எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தால் உங்களின் தேவையை அங்கு நிறைவேற்ற காத்துக்கொண்டுருப்பார்கள். வணிகம் சார்ந்த ஒப்பந்தங்கள். வா வா என்றழைக்கும் ஆசை சார்ந்த விசயங்கள் என்று ஏராளமான மறைபொருள் உண்டு.

தமிழ்நாட்டில் உள்ள சிமெண்ட ஆலை, ஊடகம், மென்பொருள் அதிபர்கள் அத்தனை பேர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் மூதலீடு செய்து இருப்பதும், அதற்கான பரஸ்பர நல்லெண்ண உடன்படிக்கைகள், பெற்ற ஆதாயங்கள், இடைத்தரகர்கள் என்று ஏராளமான பட்டியல் உண்டு. இந்தியா என்ற நாட்டிற்கு இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட இது என்றுமே இந்தியாவிற்கு விசுவாசமாக இல்லாவிட்டாலும் கூட விரோதியாக மாறிவிடக்கூடாது என்ற உள்ளார்ந்த அர்த்தம் தான் இத்தனை உதவிகளும்.

திம்பு பேச்சு வார்த்தை, ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் என்று மேம்போக்காக நாம் ஊடகத்தில் தலைப்பு செய்திகளில் வாசித்து விட்டு கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் அதற்குப் பின்னால் உள்ள அசுரத்தனமான உளவுத்துறையின் உழைப்பும், மிரட்டலும், அச்சப்படுத்துதலும் என்று தொடங்கி மொத்த இலங்கை வாழ்வுரிமை போராட்டங்களை அல்லோகல்லப்படுத்திய விவகாரங்கள் அத்தனை முடைநாற்ற வகையைச் சேர்ந்தது.

இதையெல்லாம் ராஜதந்திரம் என்ற வார்த்தைகளுக்குள் அடக்கி விடுகிறார்கள். ராஜாவும் இல்லை. ராஜ்யமும் இல்லை. வெறும் தந்திரங்களை வைத்துக்கொண்டே இலங்கை ஆட்சியாளர்கள் இன்று வரைக்கும் வளர்ந்து மொத்த தமிழினத்தை மூடுகுழி போல் ஆக்கிவிட்டார்கள். ஆனால் இன்றும் இந்தியாவில் இலங்கை என்பது மிரட்டும் அன்புத்தம்பி. இந்தியா என்பது பயந்த பெரியண்ணன்.

ஒவ்வொரு நாடும் தன்னுடைய மேலாதிக்கத்தை, பிராந்திய நலத்தை, வணிகம் சார்ந்த எதிர்கால முன்னேற்பாடு திட்டங்களை காரணத்தை பின்னால் வைத்துக்கொண்டு அத்தனை தந்திர வலைகளை வீசிக்கொண்டே முன்னேறி வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்தியா, மறுபக்கம் சீனா. இடையில் பாகிஸ்தான், ரஷ்யா,அமெரிக்கா என்று நீண்ட பட்டாளங்கள். நரி பஞ்சாயத்து செய்து கொடுத்த அப்பம் போல் கொடுத்துக்கொண்டுருக்கும் இலங்கை இன்னும் சில ஆண்டுகளில் முழிக்குமா? மூழ்கி விடுமா என்று தெரியவில்லை.

thanks
தேவியர் இல்லம் திருப்பூர்

2 கருத்துகள்:

Blogger சசிகுமார் கூறியது…

நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மார்ச் 10, 2010  
Blogger www.bogy.in கூறியது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஏப்ரல் 14, 2010  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு